இஸ்லாமியக் கொள்கை
நூலின் பெயர் : இஸ்லாமியக் கொள்கை
பக்கங்கள் : 56
விலை ரூபாய் : 12.00
மார்க்கத்தின் எச்சரிக்கை!அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188
சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து கொள்ள சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ஜமீல் ஜைனூ அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம்.
கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ள இந்நூல் மக்தப்களிலும், பள்ளிக் கூடங்களிலும் பாடநூலாக வைக்க ஏற்ற நூலாகும்.
பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை
பாடம் 2 ஏகத்துவத்தின் வகைகளும் அதன் பயன்களும்
பாடம் 3 இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்
பாடம் 4 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வடிவங்களில் மிகப் பெரும் வடிவம்
பாடம் 5 பெரிய இணை வைத்தலின் வகைகள்
அ. உதவிக்கு அழைத்தல்
ஆ.நேர்ச்சை செய்தல்
இ. பலியிடுதல்
ஈ. வலம் வருதல்
உ.சூனியம் செய்தல்
ஊ. ஜோதிடம், குறிபார்த்தல்
எ.மறைவானவை பற்றிய அறிவு
ஏ. அணியக்கூடாதவை எவை?
ஐ. செயல்பாடும் தீர்ப்பும்
ஓ. சாத்தானின் ஊசலாட்டம்
பாடம் 6 இணை வைத்தலின் கேடுகள்
பாடம் 7 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் சிறிய வடிவம்
பாடம் 8 இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?
பாடம் 9 நபிகளாரின் பரிந்துரை
பாடம் 10 மறைவழியில், நபிவழியில் தீர்ப்பளித்தல்
பாடம் 11 ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகவும், நேசர்களாகவும் திகழ்தல்
பாடம் 12 திருமறையிலும் நபிமொழி நெறியிலும் வாழுதல்
அ.திருக்குர்ஆன், ஹதீஸ்
ஆ. இறைநேசமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பும்
இ.விதியும், முயற்சியும்
பாடம் 13 நபிகளாரின் வாழ்வும், வாக்கும், அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்
பாடம் 14 ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனை
பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை
கேள்வி 1 : அல்லாஹ் நம்மை எதற்காகப் படைத்திருக்கிறான்?
பதில் : அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே வணங்க வேண்டுமென்பதற்காக அவன் நம்மைப் படைத்தான். அரபி
என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) ஜின்னையும், மனிதனையும் நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56
அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை, அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே அவர்கள் வணங்குவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் : புகாரி 2856, 5967, 6267, 6500, 7373
கேள்வி 2: வணக்கம் என்றால் என்ன?
பதில் : பிரார்த்தனை செய்தல், தொழுதல், பிராணிகளைப் பலியிடுதல் போன்ற இறைவனுக்கு விருப்பமான சொற்களுக்கும், செயல்களுக்கும் பொதுவான பெயரே வணக்கம் என்பதாகும்.
அரபி
எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்று கூறுவீராக!
என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
அல்குர்ஆன் 6:162, 163
எனது அடியான் மீது நான் கடமையாக்கியிருப்பவற்றைச் செய்து என்னை நெருங்குவதை விட எனக்கு மிக விருப்பமான வேறொன்றைச் செய்து அவன் என்னை நெருங்கி விட முடியாது என்று இறைவன் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 6502
கேள்வி 3 : அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்?
பதில் : அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் நமக்குக் கட்டளையிட்டிருப்பது போன்றே அவனை நாம் வணங்க வேண்டும்.
அரபி
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.
அல்குர்ஆன் 47:33
நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கிறானோ அது தள்ளப்பட வேண்டியதே என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம் 3243
கேள்வி 4 : அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சியும், அல்லாஹ்வின் சன்மானத்திற்கு ஆசைப்பட்டும் அல்லாஹ்வை நாம் வணங்கலாமா?
பதில் : ஆம் அப்படித் தான் அவனை நாம் வணங்க வேண்டும். ஏனெனில்
அரபி
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். என்று ஏகத்துவ நம்பிக்கையாளர்களை அல்லாஹ் வர்ணிக்கிறான்.
அல்குர்ஆன் 32:16
நான் அல்லாஹ்விடம் சுவனத்தை வேண்டுகிறேன். நரகத்தை விட்டு அவனிடம் காவல் தேடுகிறேன். என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தித்திருக்கிறார்கள்.
நூல் : அபூதாவூத் 672
கேள்வி 5 : வணக்கத்தில் சிறந்த முறை எது?
பதில் : வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் எனும் எண்ணத்துடன் அவனை வணங்குவதாகும்.
அரபி
நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அல்குர்ஆன் 26:218,219
வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ்வை நீர் (நேரில்) பார்ப்பதைப் போன்று வணங்குவதாகும். அவனை நீர் பாக்கவில்லை என்றாலும் நிச்சயம் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 50, 4777
பாடம் 2 ஏகத்துவத்தின் வகைகளும் அதன் பயன்களும்
கேள்வி 1 : அல்லாஹ் திருத்தூதர்களை எதற்காக அனுப்பினான்?
பதில் : தன்னை வணங்கும்படி மக்களை அழைப்பதற்காகவும் தனக்கு இணை கற்பிக்கும் பாவத்திலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவுமே அல்லாஹ் திருத்தூதர்களை அனுப்பினான்.
அரபி
அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.
என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அல்குர்ஆன் 16:36
கேள்வி 2 : படைத்துப் பரிபாலனம் செய்வதில் இறைவனை ஏகத்துவப்படுத்துவது என்றால் என்ன?
பதில் : படைத்துப் பரிபாலிப்பது, நிர்வகிப்பது போன்ற அல்லாஹ்வின் செயல்களில் யாரையும் அவனுக்கு இணையாக்கிவிடாமல் அவனை ஏகத்துவப்படுத்துவதே படைத்துப் பரிபாலிப்பதில் ஏகத்துவம் எனப்படும்.
அரபி
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
அல்குர்ஆன் 1:1
இறைவா நீயே வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்துப் பரிபாலனம் செய்பவன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனையே குறிப்பிடுகிறார்கள்.
நூல் : புகாரி 1120, 6317, 7385, 7442, 7499
கேள்வி 3 : வணக்கத்தில் இறைவனின் ஏகத்துவத்தை ஏற்றுச் செயல்படுத்துவது என்றால் என்ன?
பதில் : பிரார்த்தனை செய்வது, பிராணிகளைப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது வணக்கத்தில் ஏகத்துவம் எனப்படும்.
அரபி
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
என்று இறைவன் கூறுகின்றான்.
அல்குர்ஆன் 2:163
வணங்கப்படுவதற்குரிய தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை என்பதை ஏற்க அவர்களை நீங்கள் அழைப்பது உங்கள் முதல் வேலையாக இருக்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1458, 7372
கேள்வி 4 : அல்லாஹ்வின் திருநாமங்களிலும் அவனது பண்புகளிலும் அவனை ஏகத்துவப்படுத்துவது என்றால் என்ன?
பதில் : அர்ஷின் (இறை அரியணை) மீது அமர்தல், இறங்கி வருதல், கைகளிருப்பதாகச் சொல்லுதல் போன்ற திருக்குர்ஆனில் தன்னைப் பற்றி இறைவன் குறிப்பிடும் பண்புகளையும் நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகளில் நபிகளாரால் இறைவனுக்கிருப்பதாகச் சொல்லப்படும் பண்புகளையும் மாற்றியோ, கூட்டிக் குறைத்தோ பொருள் கொள்ளக் கூடாது. உருவகப்படுத்தக் கூடாது. மனிதக் கற்பனைகளுக்கேற்ப பொருள் கொள்ளக் கூடாது. அவை இல்லையென்று மறுத்துரைக்கக் கூடாது. அவனது நிறைவான தகுதிக்கேற்ப அவற்றில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே உண்மையாகவே நம்ப வேண்டும். இதற்குத் தான் இறைவனை அவனது திருநாமங்களிலும், பண்புகளிலும் ஏகத்துவப்படுத்துதல் என்று கூறப்படும்.
அரபி
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
என்று அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.
அல்குர்ஆன் 42:11
அதாவது தனது படைப்புகளில் எவருக்கும் ஒப்புவமையாகாத விதத்திலும், அவனது கண்ணியத்திற்குத் தகுந்த விதத்திலும் அவன் இறங்கி வருகிறான் என்றே இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.
கேள்வி 5 : அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
பதில் : அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷின் மீதிருக்கிறான்.
அரபி
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.
அல்குர்ஆன் 20:5
நிச்சயமாக இறைவன் (படைப்புகளின் விதிப் பயன்களைப் பற்றி) ஒரு நூல் எழுதினான், அது அவனிடமே அர்ஷின் மீதிருக்கிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3194, 7404, 7553, 7555 கேள்வி 6 : அல்லாஹ் நம்முடனிருக்கிறான் அல்லவா?
பதில் : ஆம், நம்மைப் பார்த்துக் கொண்ருப்பதன் மூலமும், நமது சொற்களைச் செவியுறுவதன் மூலமும் நம்மைப் பற்றி அறிந்து வைத்திருப்பதன் மூலமும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.
அரபி
அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான்.
என்று இறைவன் கூறுகின்றான். அல்குர்ஆன் 20:46
அவன் நம்முடனிருக்கிறான் என்பதற்கு என்ன பொருள் என அவனே விளக்கமளித்திருக்கிறான்.
நிச்சயமாக நீங்கள் (யாவற்றையும்) செவியேற்பவனை (உங்களுக்கு) அருகில் உங்களுடனேயே இருப்பவனை அழைக்கிறீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 2992, 4305, 6384, 6409, 6610, 7386
அதாவது உங்களைப் பற்றி அவன் அறிந்து வைத்திருப்பதன் மூலம் அவன் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறான்
கேள்வி 7 : ஏகத்துவத்தால் விளையும் பயன் என்ன?
பதில் : மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெறுதலும், இம்மையில் நேர்வழி நடக்கும் பெரும்பேறும், குற்றங்கள் மன்னிக்கப்படுதலும் ஏகத்துவத்தின் பயன்களாகும்.
அரபி
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர்.
என ஏகத்துவத்தின் பயன்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்
அல்குர்ஆன் 6:82
அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை இறைவன் தனது அடியார்களுக்குச் செய்யும் கடமையாக்கிக் கொண்டான்.
நூல் : புகாரி 2856, 5967, 6267, 6500, 7373
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தின் பயனை விளக்கியுள்ளார்கள்.
பாடம் 3 இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்
கேள்வி 1 : நமது நல்லறங்கள் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள் யாவை?
பதில் : அல்லாஹ்விடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன.
முதலாவது : அல்லாஹ்வை நம்புவதும், அவன் ஒருவனை மட்டுமே நம்பி அவனை ஏகத்துவப்படுத்துவதாகும்.
அரபி
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.
என்று அல்லாஹ் குறிப்பிடகிறான். அல்குர்ஆன் 18:107
நான் அல்லாஹ்வை நம்பினேன் என்று கூறிய பின்னர் (அந்த நம்பிக்கையில்) நிலைத்து நிற்பீராக என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 55
இரண்டாவது : பிறர் மெச்ச வேண்டும்: பார்க்க வேண்டும் என்பதற்காக இல்லாமல் அல்லாஹ் ஒருவனுக்காகவே எந்த நல்லறத்தையும் செய்யும் உள்ளத் தூய்மை
அரபி
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
என்று இறைவன் இதைத் தான் குறிப்பிடுகிறான்.
அல்குர்ஆன் 98:5
மூன்றாவது : நமது நல்லறங்கள் யாவும் அல்லாஹ்வின் திருத்தூதருடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப அமைவது.
அரபி
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
என்று அல்லாஹ் நமக்கு இதைத் தான் கட்டளையிடுகின்றான்.
அல்குர்ஆன் 59:7
நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கின்றானோ அது தள்ளப்படக்கூடியதே. (அதாவது அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் 4 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வடிவங்களில் மிகப் பெரும் வடிவம்
கேள்வி 1 : அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது எது?
பதில் : அல்லாஹ்விடம் மிகப் பெரும் பாவமாகக் கருதப்படுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவமாகும்.
அரபி
என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 31:13
என்று லுக்மான் அவர்கள் தமது மகனுக்கு அறவுரை கூறியதாக இறைவன் குறிப்பிட்டிருப்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும்.
பாவங்களில் மிகப் பெரியது எது? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அந்த அல்லாஹ்வுக்கு நிகராக வேறொன்றை நீர் இணையாக்குவதாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் : புகாரி 4477, 4761, 6001 6811
கேள்வி 2 : அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் மிகப் பெரும் வகை யாது?
பதில் : நமது வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவற்றுக்காகச் செய்வதே இணை கற்பித்தலின் மிகப்பெரும் வகையாகும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தித்தல், இறந்தவர்களிடமோ உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் நமக்கு எதிரில் இல்லாதவர்களிடமோ பாதுகாவல் தேடுதல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.
அரபி
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான். அல்குர்ஆன் 4:36
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவங்களுக்கெல்லாம் பெரும்பாவத்தைச் சார்ந்ததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றியே எச்சரித்திருக்கிறார்கள்.
நூல் : புகாரி 2653, 7654, 5976, 5977, 6273, 6675, 6870, 6871, 6919, 6920
கேள்வி 3 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தவர்களிடையே இணை கற்பித்தல் எனும் பெரும்பாவம் காணப்படுகிறதா?
பதில் : ஆம் காணப்படுகிறது.
அரபி
அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அல்குர்ஆன் 12:106
எனது சமுதாயத்தவர்களில் சில பிரிவினர் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு சிலைகளை வணங்கும் அளவுக்குப் போகும் வரை இறுதித் தீர்ப்பு நாள் வராது என்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
நூல் : திர்மிதி 2145
இவையிரண்டும் இதற்கு மிகப்பெரும் ஆதாரங்களாகும்.
கேள்வி 4 : இறந்தவர்களிடமும், நம் எதிரில் இல்லாதவர்களிடமும் பிரார்த்திப்பதைப் பற்றி இஸ்லாத்தின் விதி என்ன?
பதில் : இறந்தவர்களிடமும், நம் எதிரில் இல்லாதவர்களிடமும் பிரார்த்திப்பது இணை வைத்தலின் மிகப் பெரும் வகையைச் சார்ந்த பெரும் பாவமாகும்.
அரபி
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்குர்ஆன் 10:106
அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு நிகராகக் கருதி அவற்றிடம் பிரார்த்தித்த நிலையில் எவன் மரணிக்கின்றானோ அவன் நரகத்திற்கே போவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக அது பற்றி எச்சரித்துள்ளார்கள்.
நூல் : புகாரி 6683
கேள்வி 5: பிரார்த்தனை புரிவதே ஒரு வணக்கமா?
பதில் : ஆம் பிரார்த்தனையே ஒரு வணக்கம் தான்.
அரபி
என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்குர்ஆன் 40:60
பிரார்த்தனை தான் வணக்கம்.
நூல் : திர்மிதி 2895
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனையை வணக்கம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
கேள்வி 6 : பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் ஆற்றல் இறந்தவர்களுக்கு உண்டா?
பதில் : இல்லை. பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் ஆற்றல் அவர்களுக்குக் கிடையாது.
அரபி
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.
அல்குர்ஆன் 27:80 அரபி
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. அல்குர்ஆன் 35:22
அரபி
அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள்.
என்று இறைவன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.
அல்குர்ஆன் 35:13,14
பாடம் 5 பெரிய இணை வைத்தலின் வகைகள்
அ. உதவிக்கு அழைத்தல்
கேள்வி 1 : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கலாமா?
பதில் : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கக் கூடாது.
அரபி
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 16:20,21
அரபி நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான். அல்குர்ஆன் 8:9
தன்னைத் தவிர மற்றவர்களிடம் நம்மைக் காப்பாற்றும்படிக் கோரக் கூடாது என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
நித்திய ஜீவனே நிரந்தரமானவனே உனது பேரருளால் என்னைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன் என்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடமே வேண்டுபவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நூல் : திர்மிதி 3446
கேள்வி 2 : அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் உதவி கேட்கலாமா?
பதில் : கூடாது, ஏனெனில் அரபி (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
என்றே பிரார்திக்கும்படி இறைவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான். அல்குர்ஆன் 1:4
நீ ஏதாவதொன்றைக் கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி கேட்டாலும் அல்லாஹ்விடமே உதவி கேள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
நூல் : திர்மிதி 2440
கேள்வி 3 : உயிர் வாழ்பவர்களிடம் நாம் ஏதேனும் உதவி கேட்கலாமா?
பதில் : அவர்களால் முடிந்தவற்றில் தாராளமாக உதவி கேட்கலாம். ஏனெனில்
அரபி
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! என்று இறைவன் கட்டளையிடுகிறான்.
அல்குர்ஆன் 5:2
ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவியாயிருக்கும் வரை அல்லாஹ் அந்த அடியானுக்கு உதவியாயிருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 4867
ஆ.நேர்ச்சை செய்தல்
கேள்வி 4: அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?
பதில் : அல்லாஹ் ஒருவனுக்கே தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்வது அறவே கூடாது. ஏனெனில்
அரபி
இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அல்குர்ஆன் 3:35
என்று இம்ரான் என்பவரது மனைவி நேர்ச்சை செய்து கொண்டதாக இறைவன் கூறுகிறான்.
எவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கும் காரியங்களில் நேர்ச்சை செய்கின்றாரோ அவர் (அவ்வாறே அவனுக்கு வழிப்பட்டு நடக்கவும். மேலும் எவர் அவனுக்கு மாறு செய்யும் காரியங்களில் நேர்ச்சை செய்கிறாரோ அவர் (அவ்வாறு) அவனுக்கு மாறு செய்திட வேண்டாம். நூல் : புகாரி 6696, 6700
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்ச்சை இறைவனுக்கே செய்யப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இ. பலியிடுதல்
கேள்வி 5 : அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகப் பிராணிகளைப் பலியிடுதல் கூடுமா?
பதில் : அறவே கூடாது. ஏனெனில் அரபி
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
என்று இறைவன் கட்டளையிடுகிறான்.
அல்குர்ஆன் 108:2
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காக (பிராணிகளை) அறுத்துப் பலியிடுபவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து விலக்கி விடட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை வலியுறுத்துகிறார்கள்.
நூல் : முஸ்லிம் 3657
ஈ. வலம் வருதல்
கேள்வி 1 : வணக்கம் என்று கருதி நாம் சமாதிகளை வலம் வரலாமா?
பதில் : கஅபா ஆலயத்தைத் தவிர வேறு எதனையும் நாம் வலம் வரக் கூடாது. ஏனெனில் அரபி
ழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அல்குர்ஆன் 22:29
எவரொருவர் கஅபா ஆலயத்தை ஏழு முறை வலம் வந்து இரண்டு ரக்அத்களும் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்ற (நன்மையை அடைப)வராவார்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
நூல் : இப்னுமாஜா 2947
உ.சூனியம் செய்தல்
கேள்வி 7 : சூனியம் செய்வதைப் பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?
பதில் : சூனியம் செய்தல் இறை மறுப்பான செயலாகும். ஏனெனில்
அரபி
சூனியக் கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற த்தான்களே மறுத்தனர். என்று இறைவன் கூறுகிறான்.
அல்குர்ஆன் 2:102
நாசப்படுத்தக்கூடிய ஏழு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள். (அவை) இறைவனுக்கு இணை கற்பித்தல், சூனியம் செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனை இறை நிராகரிப்பான செயல்களில் ஒன்றாகவே எச்சரித்துள்ளார்கள்.
நூல் : புகாரி 2767, 6857
ஊ. ஜோதிடம், குறிபார்த்தல்
கேள்வி 8 : தமக்கு மறைவானவற்றைப் பற்றித் தெரியும் என்று கூறும் ஜோதிடர்களையும், குறிகாரர்களையும் நாம் நம்பலாமா?
பதில் : அவ்விருவரையும் அறவே நம்பக் கூடாது.
அரபி
வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். என்று இறைவன் கூறியுள்ளான்.
அல்குர்ஆன் 27:65
ஒருவன் குறி கூறுபவனிடமோ, ஜோதிடனிடமோ சென்று அவன் கூறுபவற்றை நம்பினால் அவன் நிச்சயமாக முஹம்மதாகிய எனக்கு அருளப்பட்ட இம்மார்க்கத்தை நிராகரித்தவனே ஆவான்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.
நூல் : அஹ்மத் 9171
எ.மறைவானவை பற்றிய அறிவு
கேள்வி 9 : மறைவானவற்றை வேறு யாராவது அறிய முடியுமா?
பதில் : அல்லாஹ்வே தன் திருத்தூதர்களில் யாருக்காவது அறிவித்தாலே தவிர தமது ஆற்றலால் யாராலும் மறைவானவற்றை அறியவே முடியாது.
அரபி
அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான வியங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்
என்று அல்லாஹ்வும் கூறுகின்றான்.
அல்குர்ஆன் 72:26,27
அல்லாஹ்வையன்றி யாராலும் மறைவானவற்றை அறிய முடியாது.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணித்தரமாக அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : தப்ரபானி 6245
ஏ. அணியக்கூடாதவை எவை?
கேள்வி 10 : முடிகயிறு, வளையம், மாலை போன்றவற்றை நோய் நிவாரணத்திற்காக நாம் அணிந்து கொள்ளலாமா?
பதில் : நாம் அவற்றை அறவே அணிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அரபி
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்குர்ஆன் 6:17
அறிந்து கொள் இவை உனக்கு மேலும் நலிவையே ஏற்படுத்தும். இவற்றைத் தூக்கி எறிந்து விடு. ஏனெனில் (இவைகளுக்கும் நிவாரணமளிக்கும் ஆற்றல் உண்டு என்ற இதே நம்பிக்கையில்) நீ இறந்து விடுவாயானால் ஒருக்காலும் மறுமையில் வெற்றி பெறவே முடியாது.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை அணியக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். நூல் : ஹாக்கிம் 7502
கேள்வி 11 :ஜெபமணி மாலைகள், சோழி, சிப்பி ஆகியவற்றை கண்ணேறு போன்றவற்றிற்காக அணிதல் கூடுமா?
பதில் : கண்ணேறு போன்றவற்றிற்காக இவற்றையெல்லாம் அணிதல் கூடாது. ஏனெனில்
அரபி
அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்குர்ஆன் 6:17
எவனொருவன் தாயத்துகளை மாட்டிக் கொண்டிருக்கிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டவனே ஆவான்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி திட்டவட்ட்டமாக எச்சரித்திருக்கிறார்கள்.
நூல் ; அஹ்மத் 16781
ஐ. செயல்பாடும் தீர்ப்பும்
கேள்வி 12 : இஸ்லாத்திற்கு முரணான விதிமுறைகளின் படி செயல்படுவது பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?
பதில் ; இஸ்லாத்திற்கு எதிரான விதிமுறைகளின் படிச் செயல்படுவது ஆகுமானது என்று நினைத்தாலோ அது சரி தான் என்று நம்பினாலோ அது இறை மறுப்பாகவே (குப்ர்) கருதப்படும். ஏனெனில்
அரபி
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்குர்ஆன் 5:44
ஓ. சாத்தானின் ஊசலாட்டம்
கேள்வி 13 : அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்தான். அவனை யார் படைத்தது? என:று சாத்தான் நமக்குள் மனக் குழப்பத்தை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு தவிர்ப்பது?
பதில் : இது போன்ற கேள்விகளால் சாத்தான் உங்களில் ஒருவரைக் குழப்ப நினைத்தால் அவா உடனே நான் சாத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூற வேண்டும்
அரபி
ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்
என்று அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான்.
அல்குர்ஆன் .41:36
மேலும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து நாம் எவ்வாறு தப்புவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். நமக்குள் இது போன்ற குழப்பங்களை அவன் ஏற்படுத்த முயலும் போது நான் அல்லாஹ்வையும்ணூ அவனது தூதர்களையும் நம்புகிறேன். அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். அவன் (யாரையும்) பெறவுமில்லை. அவன் (யாராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று கூறிவிட்டு பின்னர் நமது இடது புறத்தில் மூன்று தடவை துப்பும்படியும் பின்னர் சாத்தானின் குழப்பத்தை விட்டு நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும்படியும் அதன் பின்னர் அந்த இடத்தில் இருந்து அகன்று விடும்படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தி விட்டு இவ்வாறு செய்தால் சாத்தான் நம்மை விட்டுப் போய் விடுவான் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.
நூல் : அபூதாவூத் 4099
பாடம் 6 இணை வைத்தலின் கேடுகள்
கேள்வி 1 : இணை வைத்தலின் பெரிய வகையினால் விளையும் கேடு என்ன?
பதில் : இணை வைத்தலின் பெரிய வகையினால் நிரந்தரமாக நரகத்தில் கிடந்து வேக நேரிடும்.
அரபி
அல்லாஹ்வுக்கு *இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அல்குர்ஆன் 5:72
அல்லாஹ்வுக்கு ஏதாவதொன்றை இணை கற்பித்தவனாக எவன் அவனைச் சந்திக்கிறானோ அவன் நரகத்திற்குத் தான் போவான்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி மிக வன்மையாக எச்சரித்திருக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 136 கேள்வி 2 : அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்துடன் செய்யும் எந்த நல்லறங்களாலும் பயன் உண்டா?
பதில் : அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்துடன் செய்யும் எந்த நல்லறங்களாலும் புண்ணியமில்லை. ஏனெனில்
அரபி
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். அல்குர்ஆன் 6:88
என்று தனது நபிமார்களைப் பற்றியே இவ்வாறு எச்சரித்திருக்கும் போது மற்றவர்கள் இணை கற்பித்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் மேலும்.எனக்கு இணையானவர்கள் என இவர்களால் கருதப்படுபவர்கள் அனைவரையும் விட நான் எவன் தயவும் தேவையும் அற்றவன். இணை கற்பிக்கும் பாவத்துடன் இவர்கள் புரியும் நல்லறங்கள் எனக்கு அனாவசியமானவை. என்னுடன் மற்றவரையும் இணைத்துக் கொண்டு எவன் ஒரு நல்லறம் புரிவானோ (அது எனக்குத் தேவையில்லை) அவனை அவனது இணை கற்பிக்கும் பாவத்துடன் (எப்படியோ தொலைந்து போகட்டும் என்று) விட்டு விடுவேன்.
என இறைவன் எச்சரித்திருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 5300
பாடம் 7 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் சிறிய வடிவம்
கேள்வி 1 : இணை கற்பிக்கும் பாவத்தில் சிறய வகை என்பது யாது?
பதில் : ஒரு நல்லறத்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்வது தான் இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகையாகக் கருதப்படுகிறது.
அரபி
தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் 18:110
என்று இணை வைத்தலின் சிறிய வடிவம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்.
ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென்பதற்காகச் செய்யும் இணை வைத்தலின் சிறிய வகையையே நான் உங்கள் வியத்தில் மிக அதிகமாக அஞ்சுகிறேன்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் எச்சரிக்கிறார்கள்.
நூல் : அஹ்மத் 22523
ஒரு மனிதனின் காரியம் யாராவது ஒருவரின் உதவியால் நிறைவேறும் போது அல்லாஹ்வும் இன்னாரும் இல்லை என்றால் இது நடந்திருக்காது என்றோ அல்லது இது இறைவன் நாடியதும் நீங்கள் நாடியதுமாகும் என்றோ கூறுவதும் இணை வைத்தலின் சிறிய வகையைச் சார்ந்தது தான் ஏனெனில் இது அல்லாஹ் நாடியதும் இன்னார் நாடியதும் என்று கூறாதீர்கள். ஆனால் இது அல்லாஹ் நாடியது தான். பிறகு தான் இன்னார் நாடினார் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நல்லுரை புகன்றிருக்கிறார்கள். நூல் : அபூதாவூத்
கேள்வி 2 : அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது ஆகுமா?
பதில் : அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் யாரையும் கொண்டு சத்தியம் செய்தல் ஆகாது. ஏனெனில் அரபி
அவ்வாறில்லை! என் இறைவன் மேல் ஆணையாக! நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது என்று கூறுவீராக! அல்குர்ஆன் 64:7
அவன் மீது தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
எவன் அல்லாஹ்வைத் தவிர ஏனையவற்றைக் கொண்டு சத்தியம் செய்கின்றானோ அவன் இறைவனுக்கு இணை கற்பித்தவனே ஆவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள். நூல் : அஹ்மத் 311
யாருக்காவது சத்தியம் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும் இல்லையானால் மவுனமாக இருந்து விடட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். நூல் : புகாரி, 2679, 6108, 6646,
பாடம் 8 இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?
கேள்வி 1 : இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?
பதில் இறைவனிடம் இறைஞ்சிட அனுமதிக்கப்பட்ட துணைச் சாதனம், அனுமதிக்கப்படாத துணைச் சாதனம் என இரண்டு வகைகள் உண்டு.
அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனது பண்புகள் நாம் செய்யும் நல்லறங்கள் ஆகியவற்றை நமது பிரார்த்தனைகளில் துணைச் சாதனங்களாக்கி இறைஞ்சுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில்
அரபி
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அல்குர்ஆன் 7:180
அரபி
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் அல்குர்ஆன் 5:35
என்று இறைவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.
அந்தத் துணைச் சாதனம் அல்லாஹ்வின் வழிபாடும் அவனுக்குப் பிடித்த நல்லறங்களுமாகும் இறைவா உனக்குரிய அனைத்துத் திருநாமங்களின் பொருட்டாலும் உன்னிடம் நான் கேட்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
நூல் : அஹ்மத் 3528
சுவனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் பெரும்பேற்றை வேண்டிய தன் அன்புத் தோழர் ஒருவரிடம், இறைவனிடம் உமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டுமாயின் அதிகமாகத் தொழுது எனக்கு உதவுவீராக என்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளுரை பகர்ந்ததாக நபிமொழிப் பேழை முஸ்லிமில் (754) காணப்படுகிறது.
குகையில் மாட்டிக் கொண்ட மூவர் தமது வாழ்நாளில் செய்திருந்த நல்லறங்களைத் துணைச் சாதனமாக்கி இறைவனிடம் இறைஞ்சியதும் அதன் பொருட்டால் இறைவன் அவர்களின் சிரமத்தை அகற்றிக் காப்பாற்றியதும் நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழி மூலம் தெரிய வரும் சம்பவமாகும். (நூல் : புகாரி 2272, 2215, 2333, 3465, 5974,
இன்று முஸ்லிம்களிடையே சர்வ சாதாரணமாக நிலவி வரும் இறந்தவர்களை அழைக்கும் பழக்கமும் அவர்களிடம் தேவைகளை நிறைவேற்றக் கோருவதும் இணை வைக்கும் பாவத்தின் பெரிய வகையாகும்.
மேலும் இது இறைவனிடம் இறைஞ்சிட இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத துணைச் சாதனமாகும். ஏனெனில்
அரபி
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்குர்ஆன் 10:106
என்று இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இது பற்றி எச்சரித்திருக்கிறான்.
இறைவா முஹம்மத் (ஸல்) அவர்களின் கண்ணியத்தின் பொருட்டால் எனது நோயைக் குணப்படுத்து என்பது போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைத் துணைச் சாதனமாக்கி இறைவனிடம் பிரார்த்தனை செய்வது (பித்அத்) புதுமைப் பழக்கமாகும்.
மேலும் இறந்தவர்களைத் துணைச் சாதனமாக்கிப் பிரார்த்தனை செய்வது சில வேளைகளில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பெரும் பாவத்திற்கு நம்மை இட்டுச் சென்று விடுகின்றது. அதாவது மன்னர்களிடமும் அதிகாரிகளிடமும் நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமானால் அவருக்கு மிக நெருக்கமான ஒருவரைத் துணைச் சாதனமாக்கி அவர் மூலம் நமது கோரிக்கையைச் சமர்ப்பிப்பது போன்று இறைவனுக்கும் ஒரு மனிதர் இடைத் தரகராகத் தேவைப்படுகிறார் என்று எண்ணும் போது படைப்பாளனாகிய அவனது படைப்புகளுக்கு ஒப்பிட்டு விடும் இணை வைத்தல் என்று பெரும் பாவம் நிகழ்ந்து விடுகின்றது.
கேள்வி 2 : அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு யாராவது ஒரு மனிதரின் இடைத் தரகு (துணை) தேவையா?
பதில் : இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத் தரகராகவோ ஆக்கவோ அவசியம் இல்லை. ஏனெனில்
அரபி
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!) அல்குர்ஆன் 2:186
என இறைவன் கூறுகின்றான்.
(நண்பர்களே) நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது (யாவற்றையும்) செவியுறுபவனையும் (உங்களுக்கு) மிக நெருக்கமானவனையுமே நிச்சயம் அழைக்கின்றீர்கள். அவன் (தனது பேரறிவால் எப்பொழுதும்) உங்களுடனையே இருக்கின்றான். நூல் : புகாரி 4605, 6384, 6610, 7386
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குப் பிரார்த்தனையின் ஒழுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
கேள்வி 3 : உயிருடனிருப்பவர்களிடம் நமக்குப் பிரார்த்தனை செய்யும்படிக் கேட்கலாமா?
பதில் : தாரளமாகக் கேட்கலாம், ஏனெனில் இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி
அரபி (முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான். அல்குர்ஆன் 47:19
என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.
கேள்வி 4 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கும் இறைவனுக்குமிடையே எந்த வகையில் துணைச் சாதனமாக நடுவில் இருப்பவராகிறார்கள்?
பதில் : இறைவனின் தூதுத்துவத்தை நம்மிடம் சமர்ப்பிக்கும் வகையில் தான் அவர்கள் நமக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு துணைச் சாதனமாகப் பயன்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ்வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி
அரபி
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக!
அல்குர்ஆன் 5:67
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை நோக்கி நண்பர்களே நான் எனக்கு இறைவனால் அருளப் பெற்றதை உங்களிடம் அப்படியே அறிவித்து விட்டேனா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபிகளே நீங்கள் நிச்சயம் அப்படியே அறிவித்து விட்டீர்கள் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம் என்று தோழர்கள் பதிலளித்தனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் இறைவா நீயும் இதற்கு சாட்சியாக இரு என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 105, 1739, 1741, 2597, 4403, 4406, 5550, 6785, 6979, 7087, 7174, 7197, 7447 இதுவும் நபிகளாரின் மேற்கூறப்பட்ட நிலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
பாடம் 9 நபிகளாரின் பரிந்துரை
கேள்வி 1 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும்படி நாம் யாரிடம் கேட்க வேண்டும்?
பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்காகப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கும்படி அல்லாஹ்விடம் தான் நாம் கேட்க வேண்டும்.
அரபி
பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! அல்குர்ஆன் 39:44
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.
ஒவ்வொரு திருத்தூதருக்கும் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட பிரார்த்தனை செய்ய அனுமதி உண்டு. அந்தப் பிரார்த்தனையை எல்லா இறைத் தூதர்களும் இம்மையிலேயே பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள். நானோ எனது சமுதாயத்தவரில் எவர்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காதவர்களாக இறந்திருக்கிறார்களோ அவர்களுக்காக மறுமையில் பரிந்துரை செய்வதற்காக அந்தப் பிரார்த்தனையைப் பத்திரப்படுத்தியிருக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் நூல் : புகாரி 6304, 7474
.கேள்வி 2 : உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் எதற்காவது பரிந்துரை செய்யும்படிக் கேட்கலாமா?
பதில் : உலக விவகாரங்களில் பரிந்துரை செய்யும்படி உயிருடனிருப்பவர்களிடம் கேட்கலாம். ஏனெனில் அரபி
அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 4:85
என்று அல்லாஹ் அனுமதியளித்துள்ளான்.
தோழர்களே பரிந்துரை செய்யுங்கள். அதற்கான நன்மை அளிக்கப்படுவீர்கள்.
நூல் : புகாரி 1432, 6027, 6028, 7476
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதியளித்திருக்கிறார்கள்.
கேள்வி 3 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதில் நாம் வரம்பு மீறலாமா?
பதில் : நபிகள் நாயகம் (ஸல) அவர்களைப் புகழ்வதில் நாம் எல்லை மீறவே கூடாது. ஏனெனில்
அரபி
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் 18:110
என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.
மேலும் கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்களைப் புகழ்வதில் வரம்பு மீறி விட்டதைப் போல என்னையும் நீங்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து விடாதீர்கள். நான் ஓர் அடியான் தான். எனவே என்னைப் பற்றி அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றே கூறுங்கள். என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
நூல் :புகாரி 3445
பாடம் 10 மறைவழியில், நபிவழியில் தீர்ப்பளித்தல்
கேள்வி : முஸ்லிம்கள் தமக்கிடையே எழுகின்ற பிரச்சினைகளில் எதன்படி தீர்ப்புக் கூற வேண்டும்?
பதில் : இறைமறை வழியிலும் நம்மபத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகள் வழியிலும் தான் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காண வேண்டும் ஏனெனில்
அரபி
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அல்குர்ஆன் 5:49
என்று அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றான்.
இறைவா நீயே மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவன். உனது அடியார்களுக்கிடையில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட வியங்களில் நீயே தீர்ப்புச் செய்பவனாகவும் இருக்கிறாய். நூல் : முஸ்லிம் 1289
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் வலியுறுத்துகிறார்கள்.
பாடம் 11 ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகவும், நேசர்களாகவும் திகழ்தல்
கேள்வி 1 : ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளுதல், உதவிக் கொள்ளுதல் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?
அரபி
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அல்குர்ஆன் 9:71
என்று இறைவன் கூறுகின்றான்.
ஏகத்துவ நம்பிக்கையாளர்கள் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டும் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடனும் உறவுடனும் ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்கள்.
நூல் :புகாரி 481, 2446, 6027, கேள்வி 2 : வலியுல்லாஹ் (அல்லாஹ்வின் நேசர்) என்பவர் யார்?
பதில் : அல்லாஹ்வை மட்டும் நம்பி அவன் மீது அச்சம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவனது நேசர் தான்.
அரபி
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். அல்குர்ஆன் 10:62,63
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
பாடம் 12 திருமறையிலும் நபிமொழி நெறியிலும் வாழுதல்
அ.திருக்குர்ஆன், ஹதீஸ்
கேள்வி 1 : அல்லாஹ் எதற்காக நமக்குத் திருக்குர்ஆனை அருளினான்.
பதில் : அதன் வழியில் நடப்பதற்கே அல்லாஹ் திருக்குர்ஆனை அருளினான்.
அரபி
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அல்குர்ஆன் 7:3
என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.
திருக்குர்ஆனைப் படியுங்கள். அதன்படி நடங்கள். அதைக் கொண்டு (பிழைப்பு நடத்திச்) சாப்பிடாதீர்கள்.
நூல் : அஹ்மத் 14981, 14986, 15110, 15115, 15117
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள்.
கேள்வி 2 : நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகளின் படி நடப்பதைப் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?
பதில் : அந்த நபிமொழிகளின் படிச் செயல்படுதல் நம் மீது கடமையாகும். ஏனெனில் அரபி
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். அல்குர்ஆன் 59:7
என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.
கேள்வி 3 : திருக்குர்ஆனை மட்டுமே நமது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளைப் புறக்கணிக்கலாமா?
பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளைப் புறக்கணிப்பது அறவே கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனுக்கு விளக்கம் தர வேண்டிய பொறுப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையதே என இறைவன் குறிப்பிடுகிறான்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் 16:44
அறிந்து கொள்ளுங்கள். நான் நிச்சயமாகத் திருக்குர்ஆனையும் அதனுடன் அதுபோன்றதையும் வழங்கப்பட்டிருக்கிறேன்.
நூல் : அஹ்மத் 14546
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
கேள்வி 4 : அல்லாஹ்வின் சொல்லையும், அவனுடைய திருத்தூதரின் சொல்லையும் விட மற்றவர்களின் சொல்லுக்கு நாம் முதலிடம் தரலாமா?
பதில் : அல்லாஹ்வின் சொல்லையும், அவனுடைய திருத்தூதரின் சொல்லையும் விட யாருடைய சொல்லுக்கும் நாம் முதலிடம் அளிக்கவே கூடாது. ஏனெனில்
அரபி
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் 49:1
என்று அல்லாஹ் ஆணையிடுகின்றான்.
படைத்தவனுக்கு மாறாக எந்தப் படைப்புக்கும் கீழ்படிதல் கிடையாது.
நூல் : தப்ரானி 15091
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
கேள்வி 5 : நமக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றினால் அதனை எப்படித் தீர்த்துக் கொள்ள வேண்டும்?
பதில் : அவ்வாறான சமயங்களில் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று அவனது திருவேதத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று அவர்களின் பொன்மொழிகளையுமே நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்வரும் திருவசனத்தில் மூலம் அல்லாஹ் நமக்கு அப்படித் தான் கட்டளையிட்டிருக்கிறான்.
அரபி
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வியத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். அல்குர்ஆன் 4:59
ஆ. இறைநேசமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பும் கேள்வி 6 : அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் நாம் எவ்வாறு நேசிக்க வேண்டும்.
பதில் : அவர்களுக்குப் கீழ்ப்படிதல், அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுதல் ஆகியவையே அவர்கள் மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதற்குச் சான்றாகும். ஏனெனில்
அரபி
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக! அல்குர்ஆன் 3:31
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோர் மக்கள் ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் மிகவும் அன்புக்குரியவனாகும் வரை அவர் நம்பிக்கை கொண்டவராக மாட்டார்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வலியுறுத்திருக்கிறார்கள்.
நூல் : புகாரி 14, 15, 6633
இ.விதியும், முயற்சியும்
கேள்வி 7 : விதியன் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு நமது முயற்சிகளைக் கைவிடலாமா?
பதில் : விதியை நம்ப வேண்டும். ஆனால் நமது முயற்சிகளை ஒரு போதும் கைவிட்டு விடவே கூடாது. ஏனெனில்
அரபி
உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதியானதற்கு வழியை எளிதாக்குவோம். அல்குர்ஆன் 92:4,5,6,7
என்று நமது முயற்சிகள் சிறந்தவையாயிருந்தால் சுவனத்திற்கான வழி இலகுவாக்கப்படுகிறது என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
விதியை நம்பிச் (சோம்பியாருக்காதீர்கள்) செயல்படுங்கள், ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் எதற்காகப் படைக்கப்பட்டீர்களோ அதற்கான வழிகள் எளிதாக்கித் தரப்படும்.
நூல் : புகாரி 4945, 4946, 4947, 4949, 6217, 6605, 7551, 7552
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.
பாடம் 13 நபிகளாரின் வாழ்வும், வாக்கும், அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்
கேள்வி 1 : மார்க்கத்தில் புகுந்துள்ள அனாச்சாரங்களில் நல்லவை, அழகானவை என்று ஏதேனும் உண்டா?
பதில் : மார்க்கத்தில் புகுந்துவிட்டுள்ள அனாச்சாரங்கள் அனைத்துமே வழிகேடானவை தான். அவற்றில் அழகானவை நல்லவை என்று எதுவுமே கிடையாது. ஏனெனில்
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் அல்குர்ஆன் 5:3
என்ற திருவசனத்தில் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதாக இறைவன் பிரகடனப் படுத்தி விட்டான்.
எனவே அதில் புதுமைகளை (பித்அத்களைப்) புகுத்துவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை. மேலும் மார்க்கத்தில் அவ்வாறு புதுமையாகப் புகுத்தப்படும் அனாச்சாரங்களைப் பற்றி ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் (பித்அத்தும்) வழிகேடு தான். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்குத்திற்குரியவை தான்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
நூல் : நஸயீ 1560
கேள்வி 2 : மார்க்கத்தில் புதுமைப் பழக்க வழக்கங்களைப் புகுத்துதல் என்றால் என்ன?
பதில் : மார்க்கத்தில் இல்லாததை மார்க்கத்தினுள் புகுத்தி அதைக் கூட்ட முயலுவதும் அல்லது இருக்கின்றவற்றை அதிலிருந்து அகற்றி அதைக் குறைக்க முயலுவதும் மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துதல் (பித்அத்) எனப்படுகின்றது. அவ்வாறு புதுமைப் பழக்க வழக்கங்களைப மார்க்கத்தில் புகுத்திப் புகுத்தி நாளடைவில் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாக மாறிப் போனவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் கேட்கிறான்.
அரபி
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அல்குர்ஆன் 42:21
நமது மார்க்கத்தில் இல்லாதவற்றை அதில் எவன் புதுமையாகப் புகுத்துகின்றானோ அவை ஏற்கத்தக்கவை அல்ல.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைக் கண்டித்திருக்கிறார்கள்.
நூல் : புகாரி 2697
கேள்வி 3 : முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியைப் பெற எப்போது தகுதி உடையவர்களாவார்கள்?
பதில் : முஸ்லிம்கள் தமதிறைவனின் திருவேதத்திற்கும் தங்கள் திருநபியின் நெறிமுறைகளுக்கும் ஏற்ப வாழ வேண்டும். ஏகத்துவத்தைப் பரப்பும் திருப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாவத்தின் பல்வேறு வகைகளிலிருந்தும் முற்றாக தாமும் விலகி மக்களையும் விலக்க வேண்டும். தமது பகைவர்களை முறியடிப்பதற்கான முன்னேற்பாடுகளில் தங்களால் முடிந்தவரை முழுமூச்சுடன் முனைந்து செயல்பட வேண்டும். இப்படிச் செய்வார்களானால் அவர்கள் தங்கள் இறைவனுடைய உதவியைப் பெறத் தகுதி படைத்தவர்களாகி விடுவார்கள்.
அரபி
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான். அல்குர்ஆன் 47:7
என்று இறைவன் கூறுகின்றான்.
அரபி
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அல்குர்ஆன் 24:55
அரபி
அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள். அல்குர்ஆன் 24:55
என்றும் இறைவன் மேற்கண்ட இரு வசனங்களிலும் இதைத் தான் வலியுறுத்துகிறான்.
பாடம் 14 ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
இறைவா நான் உனது அடியான். உனது அடியானின் மகன். எனது நெற்றிமுடி உன் கைவசமிருக்கிறது. என்னில் உனது உத்தரவுகளே நடைமுறையாகின்றன. உனது விதியில் நேர்மையே உள்ளது. உனக்கு நீயே சூட்டிக் கொண்ட அல்லது உனது திருவேதத்தில் நீ அருளிய அல்லது உன் படைப்புகளில் யாருக்கேனும் நீ கற்றுத் தந்த அல்லது உன்னிடமிருக்கின்ற மறைவானவற்றைப் பற்றிய ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்ற உனக்குரிய திருநாமங்கள் ஒவ்வொன்றின் மூலமும் திருக்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாகவும் என் நெஞ்சத்தின் பேரொளியாகவும் எனது கவலைகளை அகற்றும் மாமருந்ததாகவும் எனது பிரச்சினைகள் தீர்வதற்கான வழியாகவும் ஆக்கியருளும்படி உன்னிடம் நான் வேண்டுகின்றேன் என கவலைகளோ பிரச்சினைகளோ நேரும் போது கூறுவானேயானால் அல்லாஹ் அவற்றை அகற்றிவிடுவான். நூல் : அஹ்மத் 3528
முற்றும்